இலவசம் மறு தமிழா…!!

இங்கு எல்லாம் இலவசம்..!
இயற்கை கொடுக்கும் காற்றென்று
இனிமையாய் இழுத்தோமென்றால்-
பெயர்தெரியா நோய்கள் பல இலவசம்…!
உயிர்கொள்ளும் நோய்வரின்
நொந்துபோய், மருத்துவமனையில் தஞ்சமடைந்தால்-
பஞ்சமான பணப்பையுடன் சேர்த்து, சாவும் இலவசம்..!

இங்கு எல்லாம் இலவசம்..!
பசியென்றொன்று பல்லிலித்தாலும்
வாய்திறந்து பொங்கரிசி இட்டுவிடாதீர்,
பின், திறந்தவாய் வழி, பொங்கரிசியினூடே உட்சென்ற எமனிடமிருந்து
வாய்க்கரிசி இலவசமாய்க் கிட்டும்…!
சோறு பொங்க காசு இல்லையென்றாலும்
உதவியென்று உற்ற நண்பனிடமும் கேட்டுவிடாதீர்
இலவச புத்திமதி இனிதே கிடைக்கப்பெறும்…!
உண்மைக் காதல் மையங்கொள்ளினும்
மாற்று சாதியை கைபிடிக்காதீர்-
காதல் கொலைக்கு நம் பிணங்கள் இலவசம்..!
கடவுளையும் விமர்சியுங்கள்
மறந்தும் கடவுள் துதிபாடும் மூடனை விமர்சித்தால்-
ஆண்மையில்லா ஆளுமையிடமிருந்து
மிரட்டல் உறுதியாய் இலவசம்..!
இங்கு எங்கு செல்லினும் இலவசம்,
எதற்கும் இலவசம்…!
மனிதமற்றுபோன மதத்திற்கு
மூளையற்றுபோன மனிதன் இலவசம்..!
மூளையற்றுபோன மனிதனுக்கு
நோய்வாய்ப்பட்ட சாதிகள் இலவசம்..!
கேட்பாரற்றுபோன தமிழனிற்கோ
நாலாபுறமிருந்தும் நயவஞ்சகம் இலவசமோ இலவசம்…!
இனியேனும், இலவசம் மறு தமிழா,
தமிழா நீ தமிழாய் தழைக்க
இலவசம் மறு தமிழா…!!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விளையாட்டாக சொல்கிறேன் #10

விளையாட்டாக சொல்கிறேன் #2