நான் சத்தமாய் அழவேண்டும்

நான் சத்தமாய் அழவேண்டும்
என் அழு குரல் உலகம் முழுதும் கேட்க வேண்டும்,
சாதிய வன்மத்தில் மாய்ந்துபோன
என் உடன்பிறவா சகோதரர்களுக்காய் அழவேண்டும்,
கொடியவர்களின் காம இச்சைக்காய் மறைந்து போன
என் உடன்பிறவா சகோதரிகளுக்காய் அழவேண்டும்,
மனிதனை மடையனாக்கிய மதத்திடம்,
அறியாமல் அடிமைப்பட்ட-
என்மின உறவுகளுக்காய் அழவேண்டும்,
கலாச்சாரம், கலாச்சாரம் என்றுசொல்லி
அறிவியலை எட்டிநின்றும் அனுபவிக்கமுடியா
என் முன்னவர்களுக்காய் அழவேண்டும்,
ஆம், நான் சத்தமாய் அழவேண்டும்...!
என் வயது ஐந்தானாலும், பத்தானாலும்
என் முன்னவன் எனக்கிட்ட சாதிய போர்வையால்,
‘என்னை மரியாதையாய் கூப்பிட்ட
பாப்புவையும், பாளையனையும் இன்ன பிறவர்களையும்
மறியாதையற்று
கூப்பிட்ட என் சிறுவயது மடமையை நினைத்து
நான் சத்தமாய் அழவேண்டும்...!’
அய்யகோ....
நான் சத்தமாய் அழவேண்டும்...!
என் அழு குரல் உலகம் முழுதும் கேட்க வேண்டும்..!
என்னை மன்னியுங்கள்,
அம்மா பாப்புவும், அய்யா பாளையனும்,
என்னை மன்னியுங்கள்...!
இம்மூடச்சமூகத்தினூடே பிறந்த
நாம் ஒவ்வொருவரும் அழவேண்டியவர்களே..!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விளையாட்டாக சொல்கிறேன் #18

விளையாட்டாக சொல்கிறேன் #10