சாங்வான் குறிப்புகள் #05

 குவான் என்றொரு நண்பர் கொரியாவில் எனக்கு உற்ற தோழராக இருந்திருந்தார். இதேபோலொரு ஆண்டு தொடக்கத்தின்பொழுதுதான், சரியாக சொல்லவேண்டுமானால், 2012ஆம் ஆண்டு, ஜனவரி மாதம்தான் அங்கு என் கால் தடத்தை, இல்லை இல்லை.. வுட்லேண்ட் ஷூவின் தடத்தை பதியவைத்திருந்தேன். அப்படி ஒரு ஷூவை எனக்கு அறிமுகப்படுத்தியது அந்த கொரிய பயணம்தான்..

என்னை வரவேற்க வந்த ஹன் ஜூ வூ என்ற பெண்ணும், அவரின் தோழியும், என்னிடம் கந்தி என்ற சொல்லைத்தவிர வேறு ஏதும் சொல்லவில்லை.. பின்புதான் அவர்களுக்கு ஆங்கில சொற்கள் வாயில் நுழையாது, நுழைந்தாலும் வெளியில் வராது எனத்தெரிந்துகொண்டேன்.. அன்றிலிருந்தே நான் ஒரு ஆங்கிலேயனாய் என்னை உணர்ந்துகொள்ள தொடங்கிவிட்டேன், அது வேறு கதை...

பின்னொரு நாளில்தான், அன்றுவரை கந்தி என்பது கொரிய சொல் போல என நினைத்துக்கொண்ட எனக்கு பேரிடி விழுந்தது.. என்னுடைய பெயரின் பின்னொட்டாக இருக்கும் எனது அப்பாவின் பெயரான காந்தி என்பதைத்தான் அப்படி சொல்லியிருக்கிறார் என்பதை தெரிந்துகொண்ட பொழுது எனக்கு கொரியாவில் வயது மூன்று மாதங்கள் ஆகிவிட்டன...

தவழமுடியா வயதானாலும், அந்த கொரிய தோழனின் உதவியால் தவழ அல்ல, எழுந்து ஓடகூட செய்தேன்..

இந்த ஆங்கிலேயே (!!) தமிழ் எழுத்தாளனுக்கு (!!!), கொரியர்கள் பேசும் அனைத்தையும் மொழிபெயர்த்து எனக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து கொடுத்தவர், அந்த ஆங்கிலம் தெரிந்த கொரியரான முனைவர். குவான்தான்.

குவான், எனக்கு நெருக்கமானதும் முதலில் கற்றுக்கொடுத்தது, எப்படி நன்றி சொல்வது என்பதைத்தான்.

நன்றி பற்றி பல குறள்கள் கிழித்த திருவள்ளுவர் கூட, கொரியாவிற்கு சென்றிருந்தால், இன்னும் ஆயிரம் பனஓலைகளை தமிழ்நாட்டிலிருந்து வரவழைக்கும்படி கொரிய அரசன் செஜோங்கிடம் முறையிட்டிருப்பார்.. அதுவும் போதாமல், செஜோங்கின் மனைவி, அரசியான, பாண்டிய நாட்டு இளவரசியிடம், 'யாரையேனும் தூது அனுப்புங்கள், பனங்குட்டி ஒன்று வேண்டுமென', என்று உள்ளம் உருக கோரிக்கை விடுத்திருப்பார்...

நன்றி தெரிவிப்பதில் அவ்வளவு நேர்த்தி இருக்கிறது கொரியர்களிடம்..

தமிழர்கள், நன்றி என்ற சொல்லின் முன் ஏதேனும் இணைத்து, மேலும் நன்றியை இலகுவாக்க முயற்சிப்பர்.. அந்த நன்றியும் அந்த சொல்லில் ஒட்டியிருக்குமே தவிர, முகபாவத்திலோ, செய்கையிலோ அந்நன்றி அப்படி நன்றியென தெரிந்துவிடாது... 

வணக்கத்தையும் அப்படிதான்... ஆனால் கொரியர்கள், நன்றியையும் வணக்கத்தையும் பலவாறு மீட்டுவர்.. மீட்டப்படுகையில் வளைந்துகொடுக்கும் வீணையின் தந்திபோல, அவர்களும் வளைந்து, குனிந்து, கனிவாக, அன்பு சொட்ட, சொட்ட அன்னிகசையோ, கம்சகப்மிதா என நீட்டி முழக்குவர்..

அன்னிகசையோ என்ற சொல்லையே, அன்னியாகசமிக்கா, அன்னகசையோ, அன்னியோ என மூன்று வகைகளாய் கூறுவர்.. முதலாவது, தன்னைவிட வயதில் மூத்தவருக்கு, இரண்டாவது, தன் வயது ஒத்த நண்பருக்கு, மூன்றாவது, தன்னைவிட இளையவருக்கு..

மகிழுந்தில் வரும் ஒருவருக்கு, எதிரில் வரும் மகிழுந்துக்காரர் சற்றே இடம்கொடுத்து, விட்டுக்கொடுத்தாரெனில், அந்த மகிழுந்துக்காரர், முன்னுள்ள அந்த திசைமாற்றியில் தன் நெற்றியை பதித்து எடுப்பார்...

தொட்டாலே தீட்டென ஒதுக்கி, பின்வாசல் வழியாய் வரவழைத்து, தூய்மைப்பணியை செய்துவாங்கிக்கொள்ளும் நிறவாதிகள் வாழும் நம்மூரெல்லாம் அழகென நினைக்கும் தருவாயில், நம்முன்னே, மகிழுந்தில் வருகை தந்து, பல்கலைக்கழக கழிவறைகளை தூய்மைசெய்து திரும்பும் அஜ்ஜுமாக்களை கண்டதும், பேராசிரியர்களும் தலைவணங்கி அன்னிகசையோ கம்சகப்மிதா என உரைக்கும்பொழுது, உறைந்து போனது மனம் அவ்வழகைக்கண்டு..

அது நன்றியல்ல, மன்னிப்பென குவான் உணர்த்திய பொழுது எனக்கு ஆறு மாதங்கள் ஆறு நாட்கள் முடிந்திருந்தது கொரியாவில்... மனிதனாகவும்..

....

....

....

இப்படியாய், ஒரு வழியாய் நன்றி கூற சொல்லிக்கொடுத்துவிட்டார், குவான்..

அடுத்தது... பிறகு சொல்கிறேன்...

(179 மனிதர்களை விழுங்கி, தான் எப்படி விழுங்கினேன் என்று ஏனைய மனிதர்களுக்கு கதையாய் சொல்ல, இருவரை மட்டுமே உயிருடன் விட்ட, ஜேஜூ ஏர் விபத்தை பார்த்து கண்கள் பனித்தன.. அந்நிறுவனத்தின் முதன்மை அதிகாரிகள் மன்னிப்பு கோரியதைக்கண்டதும், எழுத தோன்றியது..)

-சகா..

30/12/2024

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கனவு...

விளையாட்டாக சொல்கிறேன் #2

சாங்வான் குறிப்புகள்#01