விளையாட்டாக சொல்கிறேன் #20

வீட்டின் பின்புறத்தில் கீற்றால் வேய்ந்த சாய்ப்பில்தான் நீண்ட நாட்களாக சமையல் நடந்தது. சாய்ப்பின் பின்புறம் குறுக்கு கம்புகள் மீது அடுக்கப்பட்டிருந்தன விறகு கட்டைகள். அருகிலேயே, சிலபல தென்னங்கீற்று ஓலைகள், பன மட்டைகள், மண்ணெண்ணை டப்பா, உமி கிண்ணம், சிம்லி விளக்கு என அனைத்து செயலிகளும் இருந்தன. அவைகள் யாவும் எளிதில் தீயை மூட்டுவதற்காக பயன்பட்டவைகள். ஒரு நாள் இரவு எட்டுமணி வாக்கில், ஒருபுறம் எரிந்துகொண்டே மறுபுறம் அழுதுகொண்டிருந்த உடைத்த சீமகருவேல மரக்கட்டைகள் மீது குளிருக்கு இதமாக அமர்ந்திருந்தது தோசைக்கல். அதன் மீது கம்பும், அரிசியும், உளுந்தும் சேர்த்து மைய அரைத்த மாவை, தொசையாக ஊற்றிக்கொண்டிருந்தார் அம்மா. சிறிது இனிப்பு சுவையுடன் இருக்கும் அந்த தோசைக்கு பூண்டு துவையலோ, பூண்டு பொடியோதான் சரியான ஜோடியாக இருக்க முடியும். அம்மியில் ஐந்தாறு பூண்டு பற்களையும், நல்லெண்ணெயில் வறுத்த இரண்டு மிளகாயும், உப்பு சிறிதளவு வைத்து அரைக்க தயாராகிவிடும், காரசாரமான பூண்டு துவையல். சண்டைபோட்டு வாங்கிய குழித்தட்டில், தோசையை வைத்து, ஒரு குழியில் பூண்டுதுவையலில் வீட்டு நல்லெண்ணெயை ஊற்றி சாப்பிட, ஒரு ஒன்பது மணி வரைக்குமானாலும் நீண்டுவிடும் சாப்பாட்டு நேரம். அன்றைய நாளைய மொத்த வாழ்வும் அந்த ஒற்றை சாய்ப்பினுள், அடுப்பின் அருகே இளைப்பாறிக்கொண்டிருந்தது.

எப்ப பாரு, சாப்பாட்டு புராணம்தானா என்று நீங்கள் நினைப்பது அப்பட்டமாக கேட்கிறது. ஆனால் பதிவு அந்த இளைப்பாறிய பொழுதுகளை சமைத்த நெருப்பைப் பற்றியது!

பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன் பெருவெடிப்பொன்று நிகழ்ந்து அதில் உருவானதுதான் இந்த மொத்த பேரண்டமும் என்று அறிவியல் கூறுகிறது. அப்படி பெருநெருப்பின் மகளான பூமியில் அமர்ந்துகொண்டு, நெருப்பையே தான்தான் கண்டுபிடித்ததாக நம்பிக்கொண்டிருக்கும் மனிதர்களின் வாழ்வில் நெருப்பின் பங்கு அதிமுக்கியமானது. வெறும் பழங்களை உண்டுவாழ்ந்த குரங்கிலிருந்து பரிணமித்த இவனுக்கு, நாவென்ற அறிவு பச்சை மாமிசங்களை உண்ண வைத்தது. பிற்பாடு என்றோ காட்டுத்தீயில் கருகிய விலங்கொன்றை சுவைத்தவன், பின்னர் நெருப்பைவைத்து விளையாடியது ஏராளம். பல ஒளியாண்டுகள் தூரத்தில் சூரியனில் நடக்கும் ஹைட்ரஜன் இணைவு போதுமானதாக இருந்தது மரம் செடி கொடிகளுக்கு. ஆனால் சுவை கொடுத்த புத்துணர்வால் மனிதனுக்கு அது போதாதெனப்பட்டது. இன்றோ அதே நெருப்பு மனிதனை, சூரிய குடும்பத்தை விட்டு வெளியில் ஒரு செயற்கைகோளை நிலைநிறுத்தும் அளவுக்கு உயர்த்திவிட்டது. நெருப்பு வளர்ச்சியின் சின்னம்.

தாணிக்கோட்டகத்திலிருந்து இருவேறு பிரிவுகளாக, பலநாட்களாக வீட்டில் தங்கியிருந்து கல் அறுத்து செங்கல் சூளை அமைப்பதற்காக வந்திருந்தனர். வீட்டின் பின்புற இரக்கத்தில் உள்ள வயல்வெளிகளை யாவும் வரப்புகள் அகற்றி ஒன்றாக்கி, புல் பூண்டு செடிகளை செத்தி, சமதளமாக ஆக்கப்பட்டிருந்தது. தினந்தினம் காலையில் நான்கைந்து இடங்களில் ட்ரெண்ட் மில்லில் ஓடுவது போல, சேற்றின் மீது ஓடி மண்ணை கல்லாக மாற பழக்கிக்கொண்டிருந்தார்கள். அறுத்த கற்கள் யாவும் ஒரு கொட்டகையில், அந்த தொழிலாளர்களுக்கு சுவராகவும், அலமாரியாவும், கட்டிலாகவும், அமர்ந்து உண்ணும் நாற்காலிகளாகவும் அவதாரங்களை எடுத்திருந்தன. என்றோ ஊருக்கு விரும்பாமல் வருகை தந்திருந்த கருவேல மரங்கள் குத்துயிரும் கொலை உயிருமாக ஒரு புறம் அடுக்கப்பட்டிருக்க, பன மரங்களும், எங்கோ வாஸ்துசாஸ்திரங்களுக்கு நரபலிகொடிக்கப்பட்ட பல மரங்களும் அருகிலேயே கிடந்தன. ஒரு நாள் ஒருங்கே அடுக்கப்பட்ட கற்களினூடே, அந்த உருவமற்ற சாமிக்கு படையலிட்டு, தூவகால் நெருப்பை கொட்டி ஆரம்பித்திருந்தனர் செங்கல் என்றொரு சிற்பம் உருவாக்க. நேரம் கடக்க கடக்க, எலும்பிச்சை சாற்றில் வெல்லத்தை கரைத்து சிறிது ஏலக்காயும், இஞ்சியும் போட்டு அம்மாவால் செய்யப்பட்டிருந்த பானக்கம் வந்திறங்க, சுமார் விடியற்காலை நான்கு மணிக்கு முடிந்திருந்தது மொத்த வேலையும். பசுங் கற்களை கொண்டு பெரு நெருப்புகள் மூட்டப்பட்டு, களிமண்ணால் பூசப்பட்டது. நெருப்பு சகல வேலைகளையும் செய்யவல்லது போலும், சரியாக கையாண்டால் மட்டும். 

சரியாக இரண்டாவது இரவில் அந்த நெருப்பை விழுங்கிய செங்கல் சூளையை பார்ப்பதற்கு, பெருவெடிப்பில் உருவான நம் பால்வழித்திரளை, சூரியகுடும்பத்தின் கடைகோடியில் நின்று காண்பது போல காட்சிதரும். ஒராயிரம் விண்மீன்களை ஒரே இடத்தில் கண்டால் எப்படி இருக்கும்! பின்னொரு காலையில், வெளிப்புற கற்கள் யாவும் அகற்றப்பட்டு, அந்த செக்கச்செவேரென்ற பேரழகை அப்பா நின்றுகொண்டே ரசித்துக்கொண்டிருந்தார். அவர் மனதுக்குள் பல கணக்குகள் தீர்க்கப்பட்டுக்கொண்டிருந்தன. பலவித பிரச்சனைகளுக்கு நடுவே இந்த மனக்கணக்குகள் அப்பாவை சற்றே இளைப்பாற்றின. நெருப்பு ஒரு சிறந்த ஆயுதம் என அப்பா நினைத்திருத்தார்.

மற்றொரு நாள் இரவில், சாய்ப்பில் மூட்டிய நெருப்பு கொடுத்த படையலால், அசந்து தூங்கிக்கொண்டிருக்க, ஏதோ ஒரு பெருஞ்சத்தம் கேட்டு விழித்திருந்தோம். நெருப்பின் ஒளியைவிட குறைவாகவே சத்தத்தின் ஒலி பயணித்தாலும், அது கொடுக்கும் ஒளிப்படம் மனதில் அதீத தாக்கத்தை ஏற்படுத்த வல்லது. இருளென்பதே குறைந்த ஒளி என்பதுதான் என்றாலும், அந்த இருள் கொடுக்கும் பேரொலியின் அச்சம் சொல்லித்தெரிவதில்லை. என்னமோ ஏதோவென்று கற்பனைகள் படுபயங்கரமாக விரிய, அரை தூக்கத்துடன் கடந்திருந்தது அந்த இரவு. அப்பாவோ, காலையில் கல்லேற்ற வரும் லாரிக்கு சுவடை எப்படி தயார்செய்வது என்று எண்ணிக்கொண்டே இருந்திருந்தார். சூரியனின் நெருப்பு தட்டி எழுப்பியிருந்தது.

காலை எழுந்ததும், அந்த செங்கல் என்ற சிற்பத்தை, அப்பாவின் கணக்கை தீர்க்கப்போகும் அந்த நிவாரணியை, பெருவெடிப்பின் நிகழ்வை பறைசாற்றிய பேரழகை காண, கண்கள் பலவாறு விரிந்து பிம்பத்தை சேகரித்தன. ஆனால், அப்பா வெறுத்துபோய் எதையோ பார்த்துக்கொண்டிருந்த படம்தான் காணக்கிடைத்தது. ஆமாம், அந்த பெருஞ்சத்தம் கொணர்ந்த பிசாசைதான் அவர் பார்த்துக்கொண்டிருந்தார். சூரியன் என்ற நட்சத்திரத்தின் நெருப்பு என்றாவது அடங்கிவிட்டால் என்னவாகும்? சுற்றிவரும் கோள்கள் யாவும் ஒன்றோடொன்று மோதி சூரியனுள் நொறுங்கி வீழும். அப்படித்தான் வீழ்ந்து கிடந்தது மொத்த செங்கல் சூளையும். ஒற்றை கல் கூட அதன் இடத்தில் இருக்கவில்லை. அந்த பேரொலி பற்றிய பயம் அதிகமாகியிருந்தது. கடல் அலையில் சிந்திய பொரியைப் போல, உடைந்த கற்களுக்குள் இடிந்து கிடந்தன அப்பாவின் மனக்கணக்குகள். ஆனால் என்ன, இவைகளையெல்லாம் கெட்ட நேரத்து கணக்குகளில் சேர்த்துவிட்டு, முன்னோக்கி நடையை கட்டினார் அப்பா, ஒரு நெருப்பு போல.

இப்படியான சில தூக்கமில்லா இரவுகள் வெறுமனே பகல் தூக்கத்தால் உருவாக்கப்பட்டவைகளாக எண்ணிவிடமுடியாது. அது ஏதோவொரு பயத்தினாலும் கூட உருவாகியிருக்கலாம். அன்றைக்கு முதல்நாள், 'இப்போலாம் வெண்பாஸ்பரச கூரையில தூக்கிப்போட்டுட்டு போய்டுறானுங்க, பகல்ல பதினோரு மணியானதும் தானா பத்திக்குது, நெருப்புல வூடே எரிஞ்சி போய்டுது, அப்டிதான தாணிகோட்டகத்துல ஒருத்தர் வீடு முழுசும் எரிஞ்சிபோச்சாமே' என்று சொல்லிவிட்டுப்போன யாரோதான், அந்த இரவில் என் முழுத்தூக்கத்தையும் உணவாக்கி, எங்கோ நிம்மதியாக உறங்கிக்கொண்டிருந்தார். ஆந்தைகளின் சிறு நமட்டு சத்தங்கள்கூட, ஏதோ வெண்பாஸ்பரஸ் கூரை மீது படுவதுபோலொரு பிம்பத்தை உருவாக்கியிருந்தன. இன்னும் சிலநாட்கள், யாரோ வீவோ மாமா வீட்டு வைக்கோல் போரில் போட்டதுபோல் நம்வீட்டு போரிலும், நெருப்பை போட்டுவிடுவார்களோ, என்ற கெட்ட கனவுகளுடனே கழிந்திருந்தது. இப்படி கொடியவர் கையின் நெருப்பு மற்றவர் நிம்மதியை குலைக்கவும் செய்கின்றன!

ஆக நெருப்பு ஒன்றேதான், ஆனால் அதனைக்கொண்டு வாழ்வதும், அழிவதும் நம் கையின் தரத்தை பொருத்தது.

தொடருங்கள்!

விளையாட்டாக சொல்கிறேன் #20

-சக்தி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விளையாட்டாக சொல்கிறேன் #18

விளையாட்டாக சொல்கிறேன் #17