கொரியர்களின் தற்பொழுதைய நிலையும், அதன் மீதான அவர்களின் புரிதலும்.....
கடந்த சனிக்கிழமையன்று (11/10/2014), ஒரு கொரிய வேதியியல் பேராசிரியருடன் உரையாடியபடி மதிய உணவு உண்ண வாய்ப்பு கிடைத்தது. அவருடன் பேசுகையில், ஒரு மாறுபட்ட கொரிய சிந்தனையாளாராக எனக்கு அவர் தோன்றினார். என்னுடைய இந்த இரண்டாண்டு கொரிய அனுபவங்களில், இதுதான் முதல் முறை, இப்படிப்பட்ட எண்ணவோட்டமுடைய கொரியரை சந்திப்பது. பொதுவாக கொரியர்களின் எண்ணம், பொருளாதாரம் ஈட்டுதல் பற்றியே இருக்குமே தவிர, அரசியல் பற்றியோ, உலக நடப்பு பற்றியோ கவலையற்றவர்களாகவே இருப்பார்கள். கூடவே கண்மூடித்தனமான அமெரிக்க சார்புள்ளவர்களாக தங்களை காண்பித்துக்கொள்வதில் அலாதி மகிழ்ச்சி அவர்களுக்கு.
இருக்கட்டும், நான் செய்திக்கு வருகிறேன். நான் குறிப்பிடும் பேராசிரியர், சுகாட்லாந்து நாட்டில் தன்னுடைய ஆய்வுப்பணியை மேற்கொண்டு முனைவர் பட்டம் பெற்றவர், பின் அமெரிக்காவில் புகழ்பெற்ற பல்கலைக்கழகம் ஒன்றில் முதுமுனைவு ஆய்வுப்பணியை மேற்கொண்டு பின் கொரியாவில், சாங்வான் பல்கலைகழகத்தில் பேராசிரியராய் தம் ஆய்வுப்பணியை தொடர்ந்துகொண்டிருக்கிறார். இவரிடம் பொதுவுடைமை பற்றி உங்களின் கருத்தென்ன எனக்கேட்க, அவரிடம் இருந்து கிடைத்ததுதான் மற்ற கொரியர்களிடமிருந்து மாறுபட்டதாய் அமைந்தது. பொதுவுடைமையென்றால் எனக்கு மிகவும் பிடிக்கும் என்று கூறி தொடர்ந்த அவர், ’இவ்வுலகில், போரை நடத்துவதே இந்த அமெரிக்கா போன்ற வளர்ந்த வல்லாதிக்க நாடுகள்தான். அவர்கள் தம்மின் ஆயுத விற்பனையை மென்மேலும் அதிகரிக்க, மற்றநாடுகளின் மத்தியில் ஒரு அமைதியற்ற சூழலை ஏற்படுத்தி அதற்கு நடுநிலைமை பேச தாமாகவே தம்மை உட்படுத்தியும்கொள்வார்கள். இந்த சதித்திட்டத்திற்குப் பலியாகத்தான் எங்களின் கொரியதேசம் இரண்டாக சிதறுண்டு கிடக்கிறது. எங்களின் தென்கொரியாவில் மனிதமும், நாகரீகமும், பொருளாதாரமும், தொழில்நுட்பமும் முன்னேரவேண்டி மேலைநாடான அமெரிக்கா உதவி செய்தது என்கிறார்கள். உண்மையில், எங்களின் உயர்ந்த நாகரீகம் மேற்கத்திய நாகரீக திணிப்பால் முற்றிலுமாய் இங்கு அழிக்கப்பட்டிருக்கிறது. அதுமட்டுமின்றி, எங்களின் உணவுக்கலாச்சாரமும் மாறிக்கொண்டே வருகிறது. எங்களின் இறையியலை, நாங்கள் மறந்தேவிட்டோம், அந்தளவிற்கு இங்கு இயேசு விற்கப்படுகிறார். எங்களின் பாரம்பரிய குணங்களின் ஒன்றான முதியோரை மதித்தல், அப்படியென்றால் என்ன எனக்கேட்க்கும் அளவிற்கு, இந்த தலைமுறை வந்துவிட்டது. இப்படியாய் நாங்கள் முற்றிலும் மறைமுகமாய் சுரண்டப்படுகிறோம். இதில் வியப்பான விடயம் என்னவென்றால், அது யாருக்கும் வெளிப்படையாய் விளங்குவதில்லை என்பதுதான். நான் தனிப்பட்ட முறையில் பொதுவுடைமையை வரவேற்கிறேன், அது மக்களுக்கான விடுதலையை பெற்றுத்தரும் என நான் நம்புகிறேன். விடுதலை என்று நான் கூறுவது, எங்களின் வாழ்க்கையிலிருந்து எங்களின் மேன்மையான வாழ்வியல் கலையை பிரித்த இந்த மேற்கத்திய கலாச்சாரத்திலிருந்துதான். இதற்கு மேலாய், நாங்கள் ஒவ்வொருவரும், வடகொரியர்களை நேசிக்கிறோம், அவர்கள் இன்றளவும், மேற்கத்திய கலாச்சார திணிப்புக்கு உள்ளாகவில்லை என்பது எங்களுக்கு மகிழ்ச்சியே.. நாங்கள் இணைய வேண்டும், எங்களின் பண்பாட்டு, கலாச்சார்ங்களை நாங்கள் மீட்டெடுக்க வேண்டும். நான் ஒரு மதமற்ற, கொரிய பண்பாட்டை மிகவும் நேசிக்கும் ஒரு கொரியன்’. என்று முடித்தார்.
இது ஒரு தென்கொரியரின் மிகப்பொதுவான கருத்தாக இல்லையென்றாலும், நியாயமாய் அவர்களுக்கு இருக்கவேண்டிய ஒன்றாகவே நானும் கருதுகிறேன். பொருளீட்டுதல் மட்டுமே தம் வேலையாய் வைத்திருக்கும் தற்பொழுதய கொரியர்களின் ஒரே எதிர்கால நம்பிக்கை அவர்களின் மொழி. ஆனால் அதுவும், ஆங்கிலமயமாக்கப்படுகிறது என்பது மற்றுமொரு அதிர்ச்சித் தகவல். பார்ப்போம் எப்பொழுது விழிக்கிறார்களென்று,
சக்திவேல்….
கருத்துகள்
கருத்துரையிடுக