இடுகைகள்

2017 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

பருவமடைந்த நாடகம்

மழை பெய்து கிளம்பிய நுண்ணுயிர் நறுமணம் மூலையில் சாய்த்துவைக்கப்பட்ட கிரிக்கெட் மட்டையின் மீயொளி விளையாட்டில் தோற்றதன் பலனாய் தங்கை கையால் சிதறடிக்கப்பட்ட பல்லாங்குழிச் சோழிகள் எப்பொழுதாவதுதான் பயன்படுமென்று தாயம் விளையாட டாட்டு பெற்ற சப்பாத்திக்கட்டையின் புறமுதுகு பிரிட்டாணியா ரொட்டிகளை வாங்கி 100 புள்ளிகளெடுத்து உலகக்கோப்பை பார்க்க போக கனவுகண்ட பொழுதுகள் செருப்பின்றி ஓடிய இடங்களெல்லாம் பாத தடங்களை சேமித்துவைத்த கிருமிகளற்ற புழுதிமண் காற்றுக்கே உப்பிட்டு சுவைத்து நுகர கட்டாயப்படுத்தும் உப்பள சமவெளி அவ்வெளி நடக்க அணிந்த வெப்பந்தாங்கும் உவரிச்செடியிலைகள் என்னருகாமை வீட்டு நண்பன் விளையாட அழைத்த கூக்குரல் பயணித்த மாசற்ற காற்று வெளி இவையாவும் நினைவாய் நிலைத்திருக்க பருவம் மட்டும் மாறியது பக்குவமென உரைத்து பக்குவப்பட்டிருக்க வேண்டாமோ என்றிருக்கிறது இன்று! -சக்தி.

கடவுளின் கடவுள்

திடீரென கடவுள் கண்முன்தோன்றி தினந்தினம் செய்தியாகிய கொடுமைகளை கொண்டுவா தீர்த்துவிடுகிறேனென்றார்! இன்றும் மழையில்லையென்ற வானிலையறிக்கையுடன் சென்றார் நண்பரொருவர்- அவர் கையிலிருந்த வற்றா கமண்டலம் காணாமல்பொனது! ஏறுதழுவல் உண்டு ஆனால் இல்லையென்ற செய்தியுடன் வந்தார் இன்னொருவர்- தானமர்ந்திருந்த வாகனத்தைப் பறிகொடுத்தாரவர்! காவிரியில் சொட்டுநீர் கிடையாதென்ற கனடசெய்தியை நீட்டினார் மற்றொருவர்- தன்கண்களால் பார்க்கவியலாத அந்நெற்றிக்கண்ணிழந்தாரவர்! மணற்கொள்ளை தடுக்கசென்று தடியடி பெற்றிறந்த தோழர்களின் செய்தியை காட்டினார் ஒருவர்- அவரழகுக்கு அழகுசெய்த ஆடை ஆபரணங்களற்று நின்றாரவர்! நானோ வறட்சியால், இவ்வரசால், வங்கிகளால், பொருப்பற்ற மக்களால் உழவன் உயிர்விட்டானென்ற செய்தி கொண்டுசென்றேன்! தற்கொலை செய்துகொண்டார் கடவுளென்ற செய்தி கிடைத்தது! அவரும் என்னைப்போல் அவர் கடவுளிடம் முறையிட சென்றிருப்பாரோ என்றெண்ணி ஏக்கத்துடன் காத்துநிற்கிறேன் கடவுளின் கடவுளுக்காக! -சக்தி.